Sunday, August 22, 2010

சென்னைக்கு பிறந்த நாள் இன்று!

சென்னையே,
உனக்கு இன்று பிறந்த நாளாமே?

காலையில் மட்டும்
கொஞ்சம் கதிரவன்!!

பத்து மணிக்கு - பன்னீர் தூறல்,
ஒரு மணிக்கு - ஓயாத மழை,
மூன்று மணிக்கு - மூழ்கும் மழை,
ஐந்து மணிக்கு - ஐப்பசி மழை..
உனக்கு விழும் வாழ்த்து மழையில்,
நானும் நினைய வாய்ப்பு!!

காரியங்கள் காத்திருக்கட்டும்..
கால் சட்டையும், காய காத்திருக்கட்டும்..
வாழ்த்து மழை தொடரட்டும்!

Saturday, August 21, 2010

வான்மழை

'தட தடவென
இடிகள் மேளம் முழங்க,
மின் மினியென
மின்னல்கள் வான வேடிக்கை காட்ட
மேகங்களின் திருமண ஊர்வலத்தில்,
வாழ்த்தத் தூவிய மலர்கள்,
சல சல சங்கீத மழைநீர் !..
'
- என்று சந்தமுடன் உனை பாட,
தமிழனை சந்திக்க வருவதில்லை!!

வான்மழையே,
நீ மாதம் மும்மாரிப் பொழிந்தாயம்;
எங்கள் தமிழய்யா சொல்லித்தான்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
நேரிலே காண ஆசை,
மாதம் என்ன வாடகை?

மேகங்கள் - கூந்தலின் உவமை;
அலை போன்ற கூந்தல்,
அலைந்து திரியும் மேகம்...
இன்று, நாகரிகமாம்,
பெண்கள் கூந்தலை கத்தரித்துக் கொண்டு
கனடா செல்கிறார்கள்!
நீயும் உன் சிறகுகளைக் கத்தரித்துக் கொண்டு,
சுவிசர்லாந்து சென்று விட்டாயோ?

இங்கே நெல்லும் புல்லும் காய்ந்து கிடக்க,..
நீ மட்டும்,
நிலவிலே குளிர் காய்கிறாயோ?..
வான்மழையே.
உனக்கு நன்றி கூறி விழா எடுத்தத்
தமிழன் இங்கிருக்கிறான்...
இன்று காவிரித்தாய் கைவிரித்தாலும்;
வான்மழை நீயே வன் புரிந்தாலும்;
தாய்மண்ணே, தரிசு புண்ணாய் மாறினாலும்...
கடனுக்கு அரிசி வாங்கி
பொங்கல் படைக்கிறோம்!!
எங்கள் நம்பிக்கை நெய்யிலாவது
பயிரை வளர்க்கலாமென்று,
எங்கள் நம்பிக்கையை கண்டாவது
மழை பொழியாதா என்று??..

வான்மழையே,
மனிதன் - உன் மகன்,
மரங்கள் - அவன் சகோதரன்,
மகன் சகோதரனை காக்காமல் மறந்திருக்கலாம்,
தாய் மகனை காக்காமல் மறத்திருக்கலாமா?

தாயே,
மனிதன் பாவி தான்.
நீ என்ன பாவம் செய்தாய்?
அன்று
சென்னை அண்ணா சாலையை நிரப்பிவிட்டதாலோ,
இன்று
இரண்டு ரூபாய்க்குப் பையிலும்,
பத்து ரூபாய்க்குப் புட்டியிலும்,
சில நூறு ரூபாய்க்கு லாரியிலும்,
சிறைபட்டு வருகிறாயே??..!!

வான்மழையே,
நீ வானிலை அறிக்கையிலே
வருவதாய் வாக்களித்துவிட்டு,
வான் நிலையிலே வராமல் போனாயே..
நாகப்பட்டினத்திற்கு வரும் வழியில்,
விசாகப்பட்டினம் விலை கொடுத்து
வாங்கிவிட்டதா?

காவிரிச்சண்டையிலே,
பலியானோர் பல நூறு..
குளங்கள் குப்பைக் கூளங்கள் ஆனதால்,
நோயிலே பல ஆயிரம்..
தாய் மண் ஈரம் மறந்ததால்,
பசியிலே பல லட்சம்..
நீ செய்த குற்றங்களுக்கு -
சாட்சி சொல்லக்கூட வரவில்லையே...
உன் பாவங்களுக்கு
தண்டனை தருவது,
எந்த இ.பி.கோ வில்?..

வான்மழையே,
போதும் உன் குற்றச்செயல்கள்;
குளத்திற்குள் குப்பை கூளமாய்
இருந்தது போதும்,
வேகமாய் திரியும் மேகமாய்
இருந்தது போதும்,
தாய் மண் இங்கு
காய்ந்து போதும்!

தாகம் தவிக்கிறது,
உடனே தரையிறங்கு..
எங்கள் தொண்டை,
தீப்பிடிக்கும் முன்னே!!

குறிப்பு: இந்தக் கவிதை, 2004 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கையில் புதுக்கோட்டை மாவட்ட அளவில், "தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை" நடத்திய போட்டியில் முதலிடம் பெற்றது. மழை பொய்த்த காலம் அது. தலைப்பு அளித்து 25 நிமடங்களில் எழுதப்பட்டது.

Tuesday, August 17, 2010

கலங்கரை விளக்கம்

நேற்று...
மாலைப் பொன்னொளிர் நேரம்...
ஒரு நகைசுவைப் புத்தகம் வாங்கி,
கடற்கரையில் கைகோர்த்து நடந்தோம்...

பழுதடைந்து பூட்டி இருந்த கலங்கரை விளக்கம்,
நமக்காக மட்டும் திறக்கப்பட்டது...

கடற்கரை நோக்கி கனிவோடு அமர்ந்தோம்,
கதிரவன் கரைய, கருமை கூடுயது..

நான் புத்தகத்தை விரித்துப் படிக்கத்தொடங்கினேன்,
உன் புன்னகையில் என் கண் கூச,
இரவு முழுவதும், உன்னோடு சிரித்து மகிழ்ந்தேன்..

இன்று 'தினத்தந்தி'யில்,
இரண்டாம் பக்கச்செய்தி...
"பழுது அடைந்த கலங்கரை விளக்கம் மீண்டும் செயல் பட தொடங்கியது! -
கப்பல்கள் விபத்தின்றி கரை சேர்ந்தன.
"

- விபத்தில் சிக்கிய வாலிபன்.

நடு நிசி நாயகி

இரு காதுமடல் கடித்துப்பேசி,
கன்னமெல்லாம் ஈரமாக்கி,
கைக்கு அடங்காத களவானியின்
கதகதப்பில் கண் அயர்ந்து..
கண்மூடி உறங்கிப்போனேன்!

என் உள்ளங்கை கட்டிலாய்,
என் விரல்கள் தலையணையாய்,
என்னவளும் உறங்கிப்போனாள்..

நள்ளிரவு நகர்ந்த பின்னால்,
சிறிதாய் சிணுங்கத் தொடங்கினாள்...
உடலினில் வருடி,
நெற்றியில் படித்தேன்..
உணர்ந்தேன் -
உயிர் அணு பாயத்துடிக்கிறாள் என்று!!

??????

"BEEP" - LOW BATTERY!! - Blackberry mobile.. :-)