Wednesday, June 5, 2013

அக்கரைக் காதல்

அக்கரையில் எனக்கொரு
அக்கறை..

நீ துயில் எழுவதும்,
நான் தூங்கி வீழ்வதும்,
ஒரே அலைபேசி அழைப்பில் தான்...

நீ தூக்கம் கலையாமல் உளறிய வார்த்தைகள்,
நான் உளியில் செதுக்கலாம்,
நான் தூங்கி வீழ்கையில் நழுவிய உண்மைகள்,
நீ உலோகத்தில் வார்க்கலாம்.

உன் விடுதியின் சிற்றுண்டி அட்டவணை
என் நா நுனியில்..
என் சமையலறையின் உணவுத் திட்டம்
உன் விழி முனையில்..

வார நாட்கள் - அலைபேசி நேரம்:
பேசிப்பேசி வற்றாத நாவிரண்டு,
காணகாத்திருந்து, வற்றிய
கண்கள் நான்கு,

விடுப்பு நாட்கள் - ஸ்கைப் பேசும் நேரம்:
பேசாமலே வற்றும் நாவிரண்டு,
கண்பேசி கண்பேசி, குளமான
கண்கள் நான்கு,
குளுமையான உள்ளம் இரண்டு!

காத்திருக்கும் பகல் எல்லாம்,
ஆமையாய் அசைகிறது,
கதை பேசும் இரவெல்லாம்,
குதிரையேறி பறக்கிறது.

நான் வந்த கனவெல்லாம்,
காட்சிகளாய் கதை சொல்வாய்,
நீ வந்த காட்சியெல்லாம்,
கனவா, நினைவா என்ற
பேதமையில் நான்!

கண்டங்கள் தாவிப்பேச
கடல் ஒன்றும் வேலி இல்லை,
உள்ளங்கள் தழுவிப்பேச
உடல் ஒன்றும் தேவையில்லை.
சத்தியமாய் சொல்கிறேன்,

கண்டதும் வந்த காதல்
கேள்விப்பட்டு இருக்கிறேன்,
கேட்டதும் வந்த காதல்
கண்டுகொண்டு விட்டேனே!

3 comments:

Anonymous said...

nice...

Unknown said...

Wow so meaningful. Really enjoyed reading them. :)

Deepa Iyer said...

Wow! Wow! I can only say God bless this love! Can't wait for August, can you :D