Sunday, April 14, 2013

1993 - தமிழ் புத்தாண்டும், கோடை விடுமுறையும்.

என் சிந்தனைகளிலிருந்து பசுமை மாறி பழுத்துகொண்டிருக்கும் நினைவுகள் அழுகி வாடுவதற்கு முன் சிறிது பசுமையை மீண்டும் புதுப்பிக்க ஒரு முயற்சி.

20 ஆண்டுகளுக்கு முன் நடந்த தமிழ் புத்தாண்டின் பெயர், "ஸ்ரீமுக" என்று பெயர். அதுதான் எங்கள் வீட்டில் முதன் முறையாக நேரத்தை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பெற்றத் தொலைகாட்சியுடன் கொண்டாடிய தமிழ் புத்தாண்டு. அப்போது சித்திரைத்திருநளா? சன் டிவி யின் பிறந்த நாளா? போன்ற குழப்பங்கள் சூழாத காலம் (சன் டிவி தொடங்கிய நாளும் அதுவே!!).

நான்காம் வகுப்பு ஆண்டுத்தேர்வுகள் முடித்து, வழக்கம் போல் எல்லா புத்தகங்களையும் மூட்டை கட்டி பரண் மேல் ஏற்றி, எங்கள் கிராமத்தின் மணலும் வெயிலும் வீண் போகாது எங்கள் உடலுக்கு ஒருமாதம் சூரிய குளியல் போட பங்குனி முடியும் முன் சேர்ந்தடைந்தேன்.

"விஷ்ணுபுரம்" என்பது நான் கல்விக்காக குடியேறிய கும்பகோணத்திலிருந்து 25  கி.மீ தொலைவில் அமைந்த எங்கள் மூதாதையர் முகவரியும் பெருமையும் சொல்லும் ஊர். ஆக்ராஹாரம், மேலத்தெரு, கீழத்தெரு என்று அவரவர்கள் செய்த தொழிலுக்கு ஏற்ப வகுக்கப்பட்ட ஒரு சராசரி கிராமம் தான் அது.

கோடையில் எல்லா நாளும் காலை 7 மணிவரை அந்த ஓட்டு வீட்டின் குளுமையான தாழ்வாரத்து அறையில் உறங்கும் சுதந்திரம் பெற்றிருந்தோம். பெரும்பாலான காலை வேளைகளில் எங்கள் அப்பாவின் மாமாவுடன் அரசலாற்றில் குளிக்கப்போவதும், இல்லையேல், எங்கள் வீட்டு மாட்டினை எங்கள் வேலை ஆள் யாரேனும் குளிப்பாட்ட, அதன் கன்னுக்குட்டியை நான் குளிபாட்டுவதுமாக ஒரு குளுமையை தேடி பயணம் தொடங்கும்.

எங்கள் பாட்டி சாலையில் போவோர் வருவோரிடம் எல்லாம் செய்தி சொல்லி என்னை தேட, ஆற்றங்கரையிலோ, கோவில் பிரகாரங்களிலோ, செக்கு இழுக்கும் இடத்திலோ எங்களுக்கு செய்தி வர, மதியம் குளித்து உணவு அருந்த வீடு வந்து சேருவோம்.

ஆனால் புத்தாண்டு தினத்தன்று அந்த சுதந்திரங்கள் பறிக்கப்படும். பங்குனி கடைசி நாளே, எங்கள் குடும்ப புரோகிதர் அடுத்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் ஒன்றை அளித்துவிடிவார். காலை சற்றே சீக்கிரம் குளித்து, எங்கள் அப்பாவின் பூஜை, மற்ற கடமைகள் முடிய, பிறகு பருப்பு போளி, பாயாசம், வடை, வேப்பம்பூ ரசம், பானகம், நீர்மோர் என கோடை சூட்டை தணிக்கும் விருந்தை உள்ளே தள்ளி, கூடத்து ஊஞ்சலில் சாய்ந்தால் மேல் விழி இமை கீழ் நோக்கித் தள்ளும்.

மாலை 4 மணிக்கு ஊரில் உள்ள ஒரு பெரியவர் வீட்டில் அனைவரும் கூட, அங்கே அந்த ஆண்டின் பஞ்சாங்கம் படிக்கப்படும். ஊரில் மிகவும் வயதான புரோகிதர் ஒருவர் தன் வெண்கல குரலில் அந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சிகள், விழாக்கள், வானிலை பற்றிய எதிர்பார்ப்புகள் என விரிவாக அலசுவார். அந்த நிகழ்ச்சியின் பொருளில் பெருத்த நாட்டம் இல்லாவிடிலும், ஆங்கே அன்பளிப்பாக வழங்கப்படும் பனை ஓலை விசிறி, பானகம் இவற்றிர்க்காக நானும் என் அப்பாவுடன் தொற்றிக்கொள்வது வழக்கம்.

பொதுவாக மதிய வேளைகளில், வெறும் மண்ணால் ஆனா எங்கள் சாலைகளில் சூடு தாளாது. பொதுவாக ஊருக்குள் உலாவும் பொழுது செருப்பு அணியும் வழக்கமோ, பல நேரங்களில் மேல் சட்டை அணியும் பழக்கமோ இருந்தது கிடையாது. பல ஊர்களிலிருந்து கோடை விடுமுறைக்கு 6 முதல் 16  வயது கூடிய நண்பர்கள் வருவதுண்டு. அவரவர் வயது, பால் ஏற்ப மரப்பாச்சி, சோப்பு, சப்பரம். பல்லாங்குழி, தாயம், பரமபதம், புளியங்கொட்டையில் ஒத்தையா - இரட்டையா.., என எங்கள் மதிய பொழுதுகள் அகண்ட திண்ணைகளில் கழியும்.



வெயில் இறங்கி, மாலை சூழ திண்ணைகளில் இருந்த வண்டுகளும், வாண்டுகளும் சாலையில் இறங்கும். குறுகிய அளவிலான தொலைகாட்சியின் தாக்கம் நிறைந்த அந்த கிராமத்தில், கிரிக்கெட்டின் தாக்கம் பெரிதாக வேரூன்றாத நாட்களில் கல்லா - மண்ணா?, லாக்-அன்-கீ, ஐஸ்-பாய், என பட்டணத்தின் தாக்கத்துடன் மணல் புழுதி தீபாவளி புகை போல் மேல் எழும்ப இருள் கருமை சூழும் வரை விளையாடுவது வழக்கம்.

இடையே உள்ளூர் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாக்களும், நாடகம், தெருக்கூத்து, ராட்டினம், பலூன், விசில், கருப்புக்கண்ணாடி என எல்லா பொழுதுபோக்குகளும் வந்து போகும்.

6 வாரங்கள் விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் பொழுது, கொஞ்சம் மெலிந்தும், கொஞ்சம் கருத்தும், கொஞ்சம் உயர்ந்தும் நான் களித்த அந்த கோடை விடுமுறை, இன்று பல குழந்தைகளுக்கு சம்மர் கேம்பிலும், பேஸ்புக்கிலும், கணிப்பொறி விளையாட்டிலும் தளர்ந்து வருவது ஏக்கம் அளிக்கிறது!